Thursday, December 26, 2013

ரசித்த (வருத்திய) சிறுகதைகள் பற்றி

என் நண்பனுக்கு பரிசாக கொடுக்க நினைத்த புத்தகம் இல்லாததால், வெறும் கைய்யோடு திரும்பாமல், நான் படிக்க சுஜாதா வின் தேர்ந்தெடுத்த சிறு கதைகள் முதல் தொகுதி என்ற புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தேன். தமிழ் இலக்கியத்திலோ, இல்லை எந்த இலக்கியத்திலோ ஈடுபாடு இல்லாத நான், ஓர் இரண்டு தமிழ் நாவல்களையே படித்த நான், மிக எச்சரிக்கையாக மீண்டும் சுஜாதாவையே படிப்போம் என்று முடிவு செய்து எடுத்த புத்தகம் இது. அட்டையில் சுஜாதா இளமையாக தெரிந்தார். Hair Style மட்டும் இந்தியன் தாத்தா வை நினைவுபடுத்தியது. இயக்குனர் சங்கருக்கும் இவருக்கும் இருந்த உறவு எனக்கு நினைவுக்கு வந்தது. மொத்தம் 50 இல் சுமார் 40 சிறு கதைகளை படித்து முடித்திருப்பேன். அதில் குறைந்தது 35 கதைகளில் 'வறுமை' கதை கருவாக மேலோங்கி தாக்குகிறது, சுஜாதா போன்ற அறிவியல் தெரிந்த எழுத்தாளர், தன் வாழ்வில் வறுமையை எதிர்கொள்ளாத எழுத்தாளர், இவ்வளவு சுலபமாக வறுமையை கையாண்டு இருக்கிறாரே என்று வியப்பாக இருந்தாலும், மற்றொரு பக்கம் வலித்தது. இந்தியாவில் இவ்வளவு வறுமையா? அறியாமையா? பகுத்தறிவதில் இவ்வளவு பின் தங்கி இருந்தோமா, இன்னும் இருக்கின்றோமா என்ற எரிச்சல் சேர்ந்த அச்சம். சார் உங்களுக்கு வேற எப்படியும் எழுத தெரியாதா என்று அடிக்கடி கேட்க உறுத்திய கதைகள். ஒரு சில சமயம் அடுத்த கதையை தொடராமல் கோவத்தில் மூடிய கதைகள். அட அவரு சொல்றதும் சரிதானே, இருக்க தானே செய்யுது என்று நினைக்க தூண்டிய கதைகள். கதைகளின் தலைப்போ, கதாபாத்திரங்களின் பெயர்களோ நினைவில் இல்லாத போதும், கதை மட்டும் என்னை வருத்திய கதைகள். கொலையுதிர் காலம் என்ற நாவலில் வெறும் பணக்காரர்களை படித்த எனக்கு சுஜாதா பற்றிய என் எண்ணங்களை மாற்றிய கதைகள். எந்த எழுத்தாளனையும் வகைப்படுத்த கூடாது என்று உணர்த்திய கதைகள். ஒரு சில சாதரணமான கதைகள், ஒரு சில அல்ப்ப கதைகள், அதை அவரே மற்றொரு கதையில் வேறு ஒரு கதா பாத்திரத்தின் வழியாக கூறியுள்ளார். உண்மை தான். காமமும் மோகமும் சிறிது எட்டி பார்த்த கதைகள், அதிலும் வறுமையும், ஏமாற்றமும் நிறைந்திருந்த கதைகள். எழுத்தாளரே கதாபாத்திரமாக இருந்த கதைகள். அடுத்த 10 கதைகள் பெரிதாக வேறுபடும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை. இருந்தும் மனம் கவரும் என்ற நம்பிக்கையுடன் இதோ படிக்க தொடர்கிறேன்...காந்தி நமக்கு கொடுத்த விடுமுறை நாளில்.... பின்குறிப்பு : நகரம், ரேணுகா, எல்டொராடோ, தீவுகள் கரையேறுகின்றன போன்ற கதைகள் என்னை வருத்தியும் மனம் கவர்ந்த கதைகள்.

No comments: